மைக்ரோசாப்ட் அறிவிப்பு 15 இந்திய மொழிகளில் இ-மெயில் முகவரி

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், இந்திய மொழிகளில் இமெயில் முகவரி உள்பட பல்வேறு சேவைகளை வழங்க உள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள 15 உள்ளூர் மொழிகளில் இ-மெயில் முகவரி, ஆபிஸ் 365, அவுட்லுக் 2016, அவுட்லுக் டாட் காம், ஆன்லைன் மற்றும் ஆப்லைன் பரிமாற்றங்களுக்கு உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது.

சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு மைக்ரோசாப்ட் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி இந்திய பயனர்கள் தங்களது அவுட்லுக் இமெயில் கணக்கில் இந்திய மொழிகளில் தங்களுக்கான கணக்கைத் தொடங்கலாம்.

தங்களது சொந்த கணினியை பயன்படுத்தும் பயனர்களில் இ-மெயில் முகவரிக்கு வரும் மெயில்கள், அனுப்பும் மெயில்கள், -மெயில் முகவரிகளை உள்ளூர் மொழியில் உருவாக்கலாம். அவுட்லுக் டாட் காம் கூடுதலாக தனது அவுட்லுக் செயலி மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்தச் சேவையை அளிக்கும்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி மிதுல் படேல், தகவல் தொடர்பில் நவீன வாய்ப்புகளை வழங்குவது மற்றும் அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையிலான வசதிகளை அதிகரிப்பது என்கிற வகையில் இந்தியாவில் 15 மொழிகளில் சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளோம் என்றார்.

மக்கள் தங்களின் தாய்மொழியில் தொழில்நுட்பங்களை முதன்முதலில் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை, அதனால் மக்கள் பயன்படுத்தும் மொழியில் தொழில்நுட்பங்களை உருவாக்குகிறோம். நிறுவனத்தின் அடுத்த கட்ட இலக்குகளில் ஒரு பகுதியாக உருவாக்கியுள்ளோம். உள்ளூர் மொழிகளில் தொழில்நுட்பங்களை வழங்கும் சூழல் இதன் மூலம் உருவாகும்.

பல்வேறு மொழிகள் மற்றும் வடிவங்களுக்கு ஏற்ப யுனிகோட் உதவியும் கிடைக்கும். தவிர மைக்ரோசாப்ட்டின் அனைத்து தயாரிப்புகளும் இந்திய மொழிகளில் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என்றார்.

கடந்த மாதத்தில் டிஎன்என் என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஹிந்தி, பெங்காலி, தமிழ் உள்ளிட்ட மொழிகளை மாற்றும் சேவையை மைக்ரோசாப்ட் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் மொழிகளில் மூலம் பயனர்களுக்கு மிகச் சரியான சேவை கிடைக்கும். இணையதளத்தின் மூலம் மைக்ரோசாப்ட் எட்ஜ் தேடுபொறி, பிங்க் தேடுபொறி, ஆபிஸ் செயலிகள், அவுட்லுக், ஸ்கைப் போன்றவற்றிலும் பயன்படுத்தலாம். உள்ளூர் மொழிகளால் ஆன இ-மெயில் முகவரி சர்வதேச டொமைன் பெயர்களுடன் ( IDN) இணைக்கப்படும். மேலும் யுனிகோட் வசதிகளும் இதற்கு கிடைக்கும். ஹிந்தி, போடோ, டோக்ரி, கொங்கனி, மைதிலி (பிகாரின் கிழக்குப் பகுதியில் பேசும் மொழி), மராத்தி, நேபாளி, சிந்தி, பெங்காலி, குஜராத்தி, மணிப்பூரி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளில் சேவை கிடைக்கும் என்றும் நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளது.

மைக்ரோசாப்ட் அறிவிப்பு, 15 இந்திய மொழிகள், இ-மெயில் முகவரி, சர்வதேச தாய்மொழி தினம், இ-மெயில் கணக்கு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தேடுபொறி, டொமைன் பெயர்கள், யுனிகோட் வசதி

Related Posts

About The Author

Add Comment