வீட்டிற்குள் குட்டை மூங்கில் மரங்களை ஏன் வளர்க்கிறார்கள் தெரியுமா?

சுத்தமான காற்றுதான், இன்று நமக்கு அதிகம் தேவைப்படும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. நகரங்களில், வாகனப் புகை, தொழிற்சாலை புகை, ஏராளமான திடீர் உணவகங்களின் அடுப்பு புகை இதுபோன்ற எண்ணற்ற நச்சுப் புகைகள் உண்டாக்கும் கார்பன் மோனாக்சைடு காற்றில் கலந்து, மனிதரின் உடல் நலத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன

மக்களின் அன்றாட வாழ்வியல் தேவைகள் அதிகரிப்பதால் ஏற்படும் இத்தகைய பாதிப்புகளில் இருந்து, நாம் எப்படி மீள்வது? சுத்தமான காற்றை நாமும் மற்றவர்களும், வாழுமிடங்களில் இனி சுவாசிக்க முடியுமா? நிச்சயம் முடியும்! எப்படி என்று பார்க்கலாம்.

சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகவே, பருவ நிலை வேறுபாடுகள் ஏற்படுகின்றன, இதனாலேயே, பருவ மழை பொய்த்து போவதும் பின்னர் பிய்த்து உதறுவதால், மக்களை வீடுகளில் கூட முடங்க விடாமல், அல்லல் படுத்துவதுமான சம்பவங்களும் நடக்கின்றன. கோடையில் வெப்பம் அதிகரித்து, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அவதிப்படுவதும், அதிக வெம்மை காரணமாகவே, வயது மூத்தோர், கோடைக் காலங்களில் உடல் தண்ணீர் வறண்டு, உயிரிழப்பதும் தொடர்கின்றன.

நாம் இவை எல்லாவற்றையும் காணும் ஒரு மௌன சாட்சியாகவே, இருந்து வருகிறோம், இந்த பாதிப்பிலிருந்து நாமும் நம் சக மனிதரும் உய்ய வழியை காண இயலாது, தவித்து வருகிறோம்.

காற்று மாசடைய மேற்கூறிய புகைகளுடன் வேறுபல காரணங்கள் இருந்தாலும், அந்த மாசு காற்றைக் கூட இயற்கையே சரி செய்து, அவை வாழுமிடங்களில் காற்றில் கலந்துள்ள கார்பனை எடுத்துக் கொண்டு, நாம் உயிர் வாழ தேவைப்படும் ஆக்சிஜனை, அதிக அளவில் வழங்குகின்றன. நாம் சற்று முயற்சிகள் செய்தால், போதும், நாம் வாழுமிடங்கள் தூய்மை நிறைந்த காற்றால், வசந்தமாகும்.

மனிதன் நலமுடன் வாழ, இயற்கை தந்த பரிசுகள்!

நாம் வாழும் இந்த உலகில், இயற்கை நமக்கு அருகில், நம் வாழ்வுக்கு துணை செய்யும் பல்வேறு வளங்களை, ஏராளமான அளவில் வைத்திருக்கின்றன. நாம் அவற்றின் தன்மைகள் அறியாமல், அவற்றை கடக்கிறோம், இயற்கை பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்க, செயற்கை வழிகளில் முயற்சிகள் செய்து, இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி அலைகிறோம்!

இயற்கையின் படைப்பில் நம் உடல் நலம் காக்க, மருந்தாகும் செடிகள், கொடிகள் வகையில் மரங்களும் நமக்கு நன்மைகள் தருபவையே. அத்தகைய மரங்களில், சில மரங்கள், காற்று மாசுபாட்டை குறைத்து, நாம் வாழுமிடங்களில், நல்ல காற்றை வீசச் செய்து, மழையை உண்டாக்கும் தன்மைகள் வாய்ந்தவை. அவை தான், மூங்கில் மற்றும் புங்கை மரங்கள்.

வளருமிடங்களை வசந்தமாக்கும் மூங்கில் மரம்:

நாம் செல்லும் இடங்களில் சாலையோரத்தில், வயல் வெளிகளில் காணும் புல் வகையைச் சார்ந்தது தான், மூங்கில் மரம். மரமாக வளரும் இயல்புடைய இந்த மூங்கில் புல் இனத்தில், மனிதரைப் போல, பல்வேறு உட்பிரிவுகள் இருந்தாலும், அவை பொதுவாக, மனிதருக்கு நன்மைகள் செய்யும் இயல்புடையவையாகவே, காணப்படுகின்றன. மூங்கில்கள் வளர எல்லா இடங்களும் ஏற்றவை தான், இவை வளர, தொடக்கத்தில் தண்ணீர் தேவைப்படும், பின்னர் விரைவாக வளரும் தன்மை மிக்க மூங்கில், கூட்டமாக வளரும் தன்மையுடையவை.

நான்கைந்து மரங்கள் சேர்ந்து வாழும் மூங்கில் மரங்களின் வேர்கள், அவை வளரும் இடங்களில் மரத்தைச் சுற்றி கிளைகள் பரப்பி, மண்ணின் மேல் படர்ந்து காணப்படும். முட்கள் நிறைந்து, பச்சை நிறத்தில் அழகிய இலைகளைக் கொண்டு, பசுமைநிற மர அமைப்பைக்கொண்ட மூங்கில் மரங்கள், நமக்கு எப்படி உதவும்?

மூங்கிலின் நன்மைகள் :

மூங்கில் பொதுவாக வீடுகளுக்கு மேற்கூரைகளின் உத்திரமாகவும், வேலிகள், அழகுக்காக அமைக்கப்படும் சுவர் தடுப்புகள் செய்ய பயன்பட்டு, காகிதத் தயாரிப்பிலும், மூங்கில்கள் பெருமளவில் பயனாகின்றன.

மூங்கில் மரம் தன்னுடைய ஆயுள் முடிவில், இனப் பெருக்கத்துக்காக உற்பத்தி செய்யும் மூங்கில் அரிசி, மனிதரின் உடல் நலத்தைக் காத்து, மனிதர் உடலை உறுதியாக்குபவையாக கருதப்படுகின்றன.

இதுபோல, மூங்கில்கள் வளரும்போதே, அவை வளருமிடங்களில் உள்ள மக்களுக்கு, மிக அதிக அளவில் பயன் தருகின்றன.

காற்று மாசினை தடுக்கும் மூங்கில் :

மூங்கில், அதிக அளவில் நாம் உயிர்வாழத் தேவையான ஆக்சிஜனை காற்றில் கலந்து, காற்றில் உள்ள நச்சு கார்பனை உறிஞ்சும் இயல்புடையது. இதன் காரணமாக, காற்றில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சுத்தமான காற்று, ஆக்சிஜன் நிரம்பிய காற்று மனிதருக்கு சுவாசிக்க கிடைக்கிறது.

இது எந்த அளவில் என்றால், ஒரு மூங்கில் மரம் தன்னுடைய ஆயுள் காலத்தில், கிட்டதட்ட அறுபது ஆண்டுகளில், நானூற்று ஐம்பது டன் அளவு கொண்ட கார்பனை காற்றில் இருந்து உறிஞ்சிக் கொள்கிறது.

அதுபோல, மனிதருக்கு தினமும் சுவாசிக்க அதிகபட்சமாக ஒரு கிலோ என்ற அளவில் ஆக்சிஜன் தேவை, இந்த மூங்கில்கள் காற்றில் உள்ள கார்பனை உறிஞ்சிய பின் வெளியிடும் ஆக்சிஜனின் அளவு, கிட்டத்தட்ட நாம் சுவாசிக்க வேண்டிய அளவில் இருக்கிறது என்பதே, மூங்கிலின் இயற்கை அற்புதமாகும்.

வீடுகளில் அவசியம் வளர்க்க வேண்டிய மரம்:

நாம் வீடுகளில், வாசலில் மூங்கில் மரங்கள் வளர்த்து வரலாம், அபார்ட்மெண்ட்களில் வசித்தாலும், அனைவரும் சேர்ந்து அந்த கட்டிடத்தின் வாசலில் அல்லது, இருக்கும் பொது இடங்களில் மூங்கிலை வளர்த்து வர, அவை வளர வளர, அந்தப் பகுதியில் உள்ள காற்று தூய்மை அடைந்து, அனைவரும் சுவாசிக்க, நல்ல காற்று கிடைக்கும்.

வியாதிகளை தடுக்கும் :

குழந்தைகள் இளைஞர்கள் பயிலும் பள்ளி கல்லூரிகளில், மூங்கில் மரங்களை அதிக அளவில் வளர்த்து வர, அவர்களின் சுவாசத்திற்கு, நல்ல காற்று கிடைத்து, வியாதிகள் பாதிப்புகள் அகன்று, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உடல் நலத்துடன் வளர்வர்.

இதுபோல, அதிக அளவில் மக்கள் வந்து போகும், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற இடங்களிலும் மூங்கிலை வளர்த்து வரலாம். இதன் மூலம் அவ்விடங்களில் உள்ள வாகன நச்சுப்புகையை அவை உறிஞ்சி, தூய காற்றை, மக்களுக்கு அளிக்கும்.

நகர சாலைகளின் ஓரம், நெடுங்சாலைகளின் நடுவில் மூங்கில் மரங்களை வளர்த்து வர, காற்று மாசுபாட்டை பெருமளவில் தவிர்க்கலாம்.

போன்சாய் குட்டை மூங்கில் மரங்கள் :

மூங்கிலை, வாஸ்து எனும் கட்டிடக்கலை சார்ந்த ஆன்மீக வழியைப் பின்பற்றி இன்று, அதிர்ஷ்டம் தர வல்லவை, அவை வளர நம் செல்வமும் பெருகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், அதிக அளவில் வீடுகளில் சிறிய கண்ணாடி குடுவைகளில் போன்சாய் எனும் குட்டை ரக மூங்கிலை, வளர்த்து வருகின்றனர்.

குடுவைகளில் உள்ள மூங்கில் அதிர்ஷ்டம் தருகிறதோ இல்லையோ வீடுகளில் நாம் மூங்கிலை வளர்த்து வந்தால், அவை நிச்சயம், நமக்கு நல்லவற்றையே தரும்!.

நேர்மறை எண்ணங்கள் :

நல்ல காற்றை சுவாசிப்பதன் மூலம், பருவ நிலை பாதிப்புகளால் ஏற்படும் வியாதிகள் நம்மை அண்டாது, எனவே, அந்த வியாதிகளை குணமாக்கும் வைத்திய செலவுகள் மிச்சம், அதன் மூலமும், உங்கள் செல்வம் பெருகுமே!

மேலும், வீடுகளில் நாம் மூங்கிலை வளர்த்து வர, நாமும், நம் அருகில் வசிக்கும் மற்றோரும் நல்ல காற்றை சுவாசிக்க வாய்ப்பளிப்பதன் மூலம், அவர்களின் உடல் நலத்தை காக்கும் அரிய செயலை, நாம் செய்ய முடியும்.

இது போன்ற நல்ல எண்ணங்கள், நம்மை மேலும் பல நல்ல விசயங்களை, நாம் சார்ந்த சமூகத்திற்கு, செய்யத் தோன்றும் ஒரு உந்துதலை உண்டாக்கும்.

புங்கை மரம் !

எந்த சூழ்நிலையிலும், எந்த இடத்திலும் வளரும் தன்மையுடையவை, புங்கை மரங்கள், காற்றில் உள்ள நச்சு கார்பனை கிரகித்து, ஆக்சிஜனை அதிக அளவில் வெளியிடுபவை, பசுமை நிறைந்த இலைகளுடன் படர்ந்து வளரும் தன்மைமிக்க புங்க மரங்கள், நிழல் தரும் தன்மைக்காகவும், மண் அரிப்பை தடுக்கும் ஆற்றலுக்காகவும், சாலையோரங்களில், நீர்நிலைகளின் கரைகளில் வளர்க்கப்படுகின்றன.

புங்கை மரங்கள், காற்றிலுள்ள மாசுக்களை மட்டும் எடுத்துக்கொள்வதில்லை, அத்துடன் கோடைக்காலத்தில் கடுமையான வெப்பத்தை உறிஞ்சி, தாம் வளரும் இடங்களில் உள்ள, தட்ப வெப்ப மாறுபாட்டை சீராக்கும் இயல்பு கொண்டவை. மேலும், காற்றில் நச்சுக்கள் கலக்காத அளவில், காற்று வெளியை சுத்திகரித்து பாதுகாக்கும் வல்லமை, புங்க மரத்திற்கு உண்டு.

வயிற்றுப்புண்

பல்வேறு மருத்துவ பலன்கள் கொண்ட புங்கை மரத்தின் இலைகள் வயிற்றுப்புண்களை ஆற்றுகின்றன, மரப்பட்டைகள் மூல வியாதிகளுக்கு தீர்வாகின்றன.

வெப்பம் தணிப்பவை :

புங்க மரங்கள், காற்றின் வெப்பத்தையும் தணிப்பவை, புங்க மரத்தின் வேர்கள் கட்டிடங்களை ஊடுருவாமல் விலகிச்செல்லும் தன்மைமிக்கவை ஆதலால், புங்க மரத்தை அபார்ட்மெண்ட்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மற்றும் மக்கள் அதிக அளவில் வந்துசெல்லும், பேருந்து, இரயில் நிலையங்களிலும் அதிக அளவில் வளர்த்து வரலாம்.

இதன் மூலம், காற்று மாசுபாடு மட்டும் நீங்குவதில்லை, கோடையின் கடும் வெப்பத்தையும் அந்த இடங்களில் இருந்து விலக்கி, மக்களுக்கு நிழலையும் நல்ல இதமான சூழலையும் அளிக்க வல்லது, புங்க மரம்.

மக்கள் கூடும் பூங்காக்கள், சாலையோரங்கள், நெடுஞ்சாலைகள் போன்ற இடங்களில் அவசியம் புங்க மரத்தை வளர்த்து வந்தால், அனைவரும் நலம் பெறுவர்.

நமக்கு நன்மைகள் செய்யும், அரும்பெரும் ஆற்றலை கண்டபின், மூங்கிலை கண்ணாடி குடுவைகளில் அடைக்கலாமா? இல்லங்கள் தோறும் மூங்கிலையும், புங்க மரத்தையும் வளர்த்துவர, அவற்றால் சுற்றுச்சூழல் மாசுக்கள் நீங்கி, யாவரும் நலமுடன் வாழ வாய்ப்பாகுமே!.

 

Related Posts

About The Author

Add Comment