முதல்முறையாக காதல் குறித்து மனம்திறந்து பேசிய ரைசா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, தற்போது ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்து வரும் ரைசா அவரது கல்லூரி காதல் குறித்து மனம் திறந்து பேசினார். #RaizaWilson

‘பியார் பிரேமா காதல்’ படத்தில் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக நடிப்பவர் ரைசா வில்சன். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர்கள் இப்போது திரைப்பட நாயகன் – நாயகி ஆகி இருக்கிறார்கள். இதுபற்றி ரைசாவிடம் கேட்டபோது….

“எனது சொந்த ஊர் பெங்களூர். பி.காம் படித்திருக்கிறேன். சென்னை, ஐதராபாத் என்று பல ஊர்களில் மாடலிங் செய்து வருகிறேன். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு அழைத்தபோது, வித்தியாசமான நிகழ்ச்சி என்பதால் கலந்து கொண்டேன். அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

நான் ஏராளமான விளம்பரங்களில் நடித்திருக்கிறேன். 2011-ல் மிஸ் இந்தியா போட்டியிலும் கலந்து கொண்டேன். தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்தேன். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடிப்பதற்கான நடிகர்-நடிகை தேர்வு நடந்தது. இதில் நானும், ஹரீஷ் கல்யாணும் தேர்வு செய்யப்பட்டோம்.

இந்த படம் வெளிவரும் போது தான் மக்கள் என்னை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பது தெரியும். அதன்பிறகு அடுத்த படங்களில் நடிப்பது பற்றி முடிவு செய்வேன். அவசரம் காட்டமாட்டேன். நிறைய படங்களில் நடிப்பதைவிட நல்ல படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்.

கல்லூரியில் படித்தபோது நானும் காதலித்தேன். சினிமாவுக்கு எல்லாம் ஜோடியாக சென்றோம். ஆனால், அது வெற்றி பெறவில்லை. பிரிந்துவிட்டோம். என் குடும்பத்தினர் யாரும் சினிமாவில் இல்லை. நான் மாடலிங் துறைக்கு வந்தேன். இப்போது சினிமாவுக்கு வந்திருக்கிறேன். பெண்கள் எப்போதும் வலிமையானவர்கள். எனக்கும் அந்த துணிச்சல் இருக்கிறது” என்றார். #RaizaWilson

Related Posts

About The Author

Add Comment