வடமாகாணத்தின் கல்வி நிலை மகிழ்ச்சியளிக்கிறது

[b]ஜனாதிபதி[/b]

2015ஆம் ஆண்டு க.பொத உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 9 மாகாணங்களில் வட மாகாணம் முதலிடம் பெற்றுள்ளது.  25 மாவட்டங்களில் யாழ் மாவட்டமே முதலிடம் பெற்றுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (27) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டில் நடைபெற்ற சமுர்தி ‘சிப்தொர’ புலமை பரிசில் வழங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நீண்டகால யுத்தத்தினால் எல்லையில்லா துன்பங்களை அனுபவித்த வடக்கு மாணவர்கள் கல்வியில் முன்னிலையில் உள்ளமை மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம்.

இன்று நாம் மிகவும் போட்டி மிகுந்த சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்று வெற்றியடைவது போல வாழ்க்கையிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுகொள்ள வேண்டும். அது இலகுவான காரியமல்ல.

ஆரம்ப காலங்களில் சமுர்தி திட்டத்திற்கு 7 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு 14 பில்லியன் ஒதுக்கப்பட்டது. இவ்வாண்டு 42 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் வறுமையை ஒழித்து அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதியாகும்.

வறுமையை ஒழித்து அபிவிருத்தியை மேற்கொள்வதே எமது நோக்கம். அதற்கான முதலாம் ஆண்டு இதுவாகும். அதன் முதற்பணியாக இப்புலமை பரிசில் வழங்கும் திட்டம் அமைந்துள்ளமை பெருமைக்குரியது என்று தெரிவித்தார்.

சமூக வலுவூட்டல்  மற்றும் நலனோன்புகை அமைச்சின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட சிப்தொர புலமைபரிசில் வழங்கும் நிகழ்வில் நாடு முழுவதிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 1400 மாணவர்களுக்கு புலமைபரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், சமூக வலுவூட்டல்  மற்றும் நலனோன்புகை அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க. பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அமைச்சின் செயலாளர் மஹிந்த செனவிரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

[b]AR[/b]

Related Posts

About The Author

Add Comment