ஃபேஸ்புக்கில் பரபரப்பு கேரள பெண்கள் உடையற்ற மார்பு போராட்டம்

ஆண்களின் நிப்பிள் (முலைக்காம்பு) இயல்பாக எடுத்துக் கொள்ளப்படும் போது, பெண்களின் உடலில் மட்டும் அது ஒரு கவர்ச்சிப் பொருளாக காணப்படுவது ஏன்? ஆண், பெண் உடலில் இப்படியான இருவேறுபட்ட கண்ணோட்டம் இருப்பது ஏன்? பெண் உடலை மட்டும் ஏன் ஒரு செக்ஸ் பொருளாக உருவகப்படுத்துகிறீர்கள்? என கூறி உலகளாவிய போராட்டம் பெண்கள் பல காலமாக நடத்தி வருகிறார்கள்.

இது இப்போது கேரளாவிலும் பரவியிருக்கிறது. கேரளாவை சேர்ந்த சில பெண்கள் இந்த போராட்டத்தை தங்கள் முகநூல் மூலமாக துவக்கியுள்ளனர். அவர்கள் மேல் ஆடை ஏதும் அணியாமல் தங்கள் மார்பை படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.

ஆரத்தி!

இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரத்தி எனும் பெண்ணால் மாரு துறக்கள் சமரம் (Maaru Thurakkal Samram) என்ற பெயரில் துவக்கப்பட்டது. இதன் பொருள் உடையற்ற மார்புக்கான போராட்டம் ஆகும். இந்த போராட்டம் துவங்குவதற்கு ஒரு காரணமும் பின்னணியில் இருக்கிறது.

பேராசிரியர்!

கேரளாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பெண் உடலை குறித்து தரக்குறைவான கருத்துக்கள் கடந்த திங்கள் கிழமை பதிவு செய்திருந்தார். அதில் அவர் ஒரு மாணவியின் மார்பகத்தை அறுத்து வைத்த தர்பூசணி போல இருப்பதாக அருவருக்கத்தக்க முறையில் கருத்து பதிந்திருந்தார். இந்த நிகழ்வுக்கு பிறகு தான் இந்த உடையற்ற மார்பு போராட்டம் துவங்கியது.

ஆர்வலர்!

சமூக ஆர்வலரும், மாடலுமான ரிஹானா ஃபாத்திமா இந்த உடையற்ற மார்பக பிரச்சாரத்தில் கடந்த திங்களன்று கலந்துக் கொண்டார். இவர் தனது தோழி தியா சானாவையும் இந்த பிராச்சரத்தில் இணைத்துக் கொண்டார்.

தியா சானா ரிஹானாவின் இரண்டு புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் றிஹானா அறுத்த தர்பூசணியை தனது வெற்றுடல் மார்பகத்தின் மீது வைத்தும், ஒரு படத்தில் வெறும் மார்புடனும் தோற்றம் அளித்தார்.

தியா குறிப்பு…

தாங்கள் பகிர்ந்திருந்த அந்த புகைப்படத்துடன்… உடல் சார்ந்து ஆண்கள் அனுபவிக்கும் அதே சுதந்திரத்தை பெண்களுக்கும் இருக்க வேண்டும். இதில் சீர் இருக்க வேண்டும் என்று கூறி தங்கள் படங்களை பகிர்ந்திருந்தனர். ரிஹானாவின் அரைநிர்வாண படத்துடன், தியா சானா தான் தர்பூசணியை கையில் ஏந்தி நிற்பது போன்ற புகைப்படமும் பகிர்ந்திருந்தார்.

ரிஹானா பெண்ணுரிமைக்காக குரல் கொடுக்கும் நபராவார். இவர் பெண்களை கவர்ச்சிப் பொருளாக காணும் வழக்கத்திற்கு எதிரான பல விவாதங்களில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், தான் இப்படியாக படம் பகிர்ந்ததற்கு காரணம் ஆரத்திக்கு உறுதுணையாக இருக்கவும், ஆதரவளிக்கவும் என்றும் கூறியிருக்கிறார்.

என் உடல், என் உரிமை…

இந்த போராட்டம் / விழிப்புணர்வு குறித்து ரிஹானா கூறுகையில், “பெண் உடல் என்பது கொச்சையானது அல்ல. நான் இந்த படங்களை பகிர்ந்ததற்கு காரணம், என் உடல் என் உரிமை என்பதை நிலைநாட்ட. யாரும் எது சரி, எது தவறு என்று யாரும் எங்களுக்கு சொல் இயலாது. ஆரத்தி இதுக்குறித்த குரலை வெளிப்படுத்திய போது, அதில் இணைவதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். இது சார்ந்த விவாதங்களில் ஏற்கனவே நான் எனது கருத்துக்களை பகிர்ந்திருக்கிறேன். நான் தான் என் தோழி தியாவை என் படங்களை பகிர கூறினேன். இங்கே பேச வேண்டியது படங்களை குறித்து அல்ல, இந்த இயக்கம் குறித்து” என்று ரிஹானா கூறியிருக்கிறார்.

ஆண்கள் உடலில்?

“ஆண்கள் உடலில் கொச்சை இல்லை, கவர்ச்சி இல்லை? ஆனால், பெண் உடலில் மட்டும் கொச்சை மற்றும் கவர்ச்சியை திணிப்பது ஏன். எப்படி இந்த நிலைப்பாடு மாறுபடுகிறது. பெண்களின் உடலை ஒரு செக்ஸ் கருவியாக மட்டுமாகவே காண்கிறார்கள். ஆண் உடலில் இருக்கும் அதே பாகங்கள் தான் பெண் உடலிலும் இருக்கிறது. இது மிகவும் சாதாரணமான ஒன்று. இதை புரியவைக்கவே நாங்கள் இந்த ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுத்து வைத்திருக்கிறோம்” என்று மேலும் கருத்து பகிர்ந்துள்ளார் ரிஹானா.

படங்கள் நீக்கம்!

ஃபேஸ்புக் தனது கொள்கைகள் மற்றும் பாலிசிக்கு எதிராக இருப்பதாக அறிவித்து தியா பகிர்ந்த படங்களை தங்கள் இணையத்தில் இருந்து நீக்கியுள்ளது. மேலும், அடுத்த 24 மணிநேரத்திற்கு அவர் தனது முகவரியை பயன்படுத்தவும் தடை விதித்தது.

தியா ரிஹானாவின் படத்தை பகிர்ந்த ஒரு மணி நேரத்திற்குள் பல கருத்துக்கள் பகிரப்பட்டன. பலதரப்பட்ட மக்கள் இந்த பிராச்சாரத்தை வரவேற்று கருத்துக்கள் பகிர்ந்தனர். சில பேர் இதை வன்மையாக கண்டித்தும் கருத்துக்கள் பகிர்ந்தனர்.

ஃபரூக் கல்லூரி!

ஃபரூக் கல்லூரி பேராசிரியரின் கருத்திற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கவல்ல இந்த போராட்டம். இது ஒட்டுமொத்த சமூகத்தில் பெண்களை உடலை செக்ஸ் கருவியாக கருதும் எண்ணத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளனர்.

ஆண் மார்பு சாதாரணமாக காணும் போது, பெண்களின் மார்பு மட்டும் கவர்ச்சி பொருள் ஆனது எப்படி? பெண்கள் தங்கள் குழந்தைக்கு பாலூட்டுவதை கூட தவறான பார்வையில் காணும் ஆண்கள் வாழும் சமூகத்தில் தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். என்று தியா கூறியிருக்கிறார்.

கிரஹலக்ஷிமி!

சமீபத்தில் மலையாள பத்திரிகை கிரஹலக்ஷிமி இதுகுறித்த ஒரு விழிப்புணர்வு வெளிப்படுத்தியது. தங்கள் அட்டைப்படத்தில் பெண் ஒருவர் தாய்பால் ஊட்டும் படத்தை அட்டைப்படத்தில் இடம்பெற செய்தது. அதை ஃபேஸ்புக்கில் பிரமோட்டும் செய்தனர். ஆனால், அதே ஃபேஸ்புக் தங்கள் படத்தை நீக்கியுள்ளது. எங்கள் உடலை கொச்சை என மக்கள் எதை வைத்து கூறுகிறார்கள் என்றும் ரிஹானா கேள்வி எழுப்பியுள்ளார்.

விமர்சனம்!

ரிஹானா மற்றும் தியா பகிர்ந்துள்ள இந்த படங்கள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பலரும் ரிஹானா வெற்றுடலுடன் தனது மார்பு படத்தை பகிர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் ஆரத்தி, ரிஹானா இருவரையும் இப்படியான படங்கள் பகிர்ந்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளனர்.

பெண்ணியவாதிகள்!

பெண்ணியவாதிகள் சிலர் ரிஹானா தனது படத்தை அவரது முகவரியில் போடாதது ஏன்? படங்களை பகிர்ந்த தியா ஏன் இந்த போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை? ரிஹானா ஒரு மாடல் அவரது படம் வெளியானால் தான் ஊடகங்களில் பெரும் தாக்கம் ஏற்படும் என்ற உள்நோக்கம் இருக்கிறதா? என பல்வேறு கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

தோள் சீலைப் போராட்டம்!

இதே கேரளாவில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் சாதியக் கொடுமைகளை எதிர்த்து தோள் சீலைப் போராட்டம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வெடித்தது. சாதிய ஏற்றத்தாழ்வு காட்டி, கீழ் சாதிய பெண்கள் மேலாடை அணிய வேண்டும் என்றால் வரி செலுத்த வேண்டும் என்றும். மேல் சாதி மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்கள் முன் மேலாடை இன்றி தான் இருக்க வேண்டும் என்ற கொடுமை சட்டமும் இருந்தது.

பல போராட்டங்கள் நடத்தி அனைத்து சாதிய பெண்களும் மேலாடை உடுத்தும் உரிமை பெற்றனர். இன்று அதே கேரளத்தில் பெண்கள் மேலாடை இன்றி இருந்தால் என்ன? என்று கூறி, உடையற்ற மார்பு கோரி போராட்டம் நிகழ்கிறது. இதுவும் வரலாறு!

Related Posts

About The Author

Add Comment