மேஷ ராசி வாசகர்களே விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்

அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரம் 1ம் பாதம் வரையிலும் உள்ள மேஷ ராசிக்காரர்கள் அனைவருக்கும் இந்த பலன் பொருந்தும். கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே கோட்சார ரீதியில் நல்ல பலன்கள் நடக்காமல் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்த மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பிறந்திருக்கிற விளம்பி தமிழ்ப் புத்தாண்டு துன்பங்கள் எதையும் தராமல் இன்பங்களை மட்டுமே தருகிற மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமையும். சென்ற வருட சனிப்பெயர்சு்சியால் அஷ்டமச்சனி நடந்து கொண்டிருந்ததால், வேலையில் சங்கடங்கள், வேலை இழப்பு, தற்காலிக பணிநீக்கம், மனதிற்கு பிடித்தமான வேலை கிடைக்காதவர்கள் அனைவரும் விளம்பி வருட ஆரம்பத்தில் இருந்தே வேலை சம்பந்தப்பட்ட குறைகள் நீங்கி, மனமகிழ்ச்சியோடு, தங்களுடைய வாழ்வின் முன்னேற்றத்தை நோக்கி நடை போடுவீர்கள்.

சிலருக்கு வாழ்க்கை குறித்து இருந்து வந்த நம்பிக்கையின்மை, மன அழுத்தம், கணவர் – மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேற்றுமை, பிரிவு, வழக்கு, கடன் தொல்லைகள், ஆரோக்கிய குறைவு, தொழில் நஷ்டம், பிறரிடம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தவர்கள் போன்றவைகளும் நீங்கி, வாழ்க்கை இனி நல்ல வழியில் செல்லத் துவங்கும். இதை வாழ்வின் ஒரு புதிய தொடக்கமாகக் கருதி அடியெடுத்து வையுங்கள். நல்லதே நடக்கும். இந்தத் தமிழ்ப் புத்தாண்டு முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்படும்.

பணவரவு தாராளமாக இருந்து கொண்டே இருக்கும். தொட்டது துலங்கும். எடுத்த காரியங்களை ஜெயமாக முடிப்பீர்கள். இதுவரை வருமானம் இன்றி பணப் பற்றாக்குறையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் பெருகும். ராஜகிரகங்கள் என்று சொல்லப்படும் முக்கியமான கிரகங்கள் அனைத்தும் தற்போது மேஷ ராசிக்கு சாதகமான நிலையில் இருப்பதால், கடுமையான பலன்களைத் தந்து வந்த அஷ்டமச்சனி சமீபத்தில் விலகியிருக்கிறது. இனிமேல் எந்த ஒரு விஷயத்திலும் தயக்கம் காட்டத் தேவையில்லை.

முன்னேற்றப் பாதையில் வெற்றிநடை போடத் தயார் ஆகுங்கள். பிறந்த ஜாதகத்தில் யோகமான தசாபுக்திகள் நடந்து கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு பலன்கள் எல்லாமே இரட்டிப்பாக கிடைக்கும். அதிலும் சிலர் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழின் உச்சிக்கு செல்வார்கள். பொது வாழ்வில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும் ஆண்டு இது. கடந்த காலங்களில் நீங்கள் அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் பல்வேறு மனக்கஷ்டங்களையும் தடைகளையும் சந்தித்திருப்பீர்கள்.

அப்படிப்பட்ட நிலை எதுவும் இப்போது இருக்காது. எல்லா விஷயங்களும் நிதானமாக நல்லபடியாக நடக்கும். வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை திருமணம் கைகூடாதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன்கள் அமையும். நீண்டகாலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக் கவலை இந்த ஆண்டோடு நீங்கிவிடும். காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் நினைத்தவரை மணமுடிப்பீர்கள்.

இதுவரை குழந்தை பாக்கியம் வாய்க்காமல் இருந்து வந்தவர்களுக்கு புத்திர காரகனாகிய குருபகவான் ஏழில் இருப்பதால் குழந்தைச் செல்வத்தை வழங்குவார். தாத்தா பாட்டிகள் வீட்டில் பேரக்குழந்தையின் மழலைச் சத்தத்தை கேட்கப் போகும் நேரம் வந்துவிட்டது. கொஞ்சி விளையாட, பொம்மைகள் வாங்க தனி பட்ஜெட் ஒதுக்க வேண்டிய காலமாக இந்த ஆண்டு நிச்சயம் இருக்கும்.

நல்ல வேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம், பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமையும். இனி வாய்ப்புகளைத் தேடி நீங்கள் போகத் தேவையில்லை.

வாய்ப்புகள் உங்கள் கதவை தட்டும். வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த வேலை கிடைக்கும். உங்களைப் பிடிக்காத மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு அனுசரணையானவர் அந்த இடத்திற்கு வருவார். அல்லது அதே அதிகாரி மனமாற்றத்துடன் உங்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து நஷ்டத்தை சந்தித்தவர்களுக்கு இந்த ஆண்டு லாப முகத்தோடு ஆரம்பிக்கும். சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்வதற்கோ புதிய கிளைகள் ஆரம்பிப்பதற்கோ இது மிகவும் நல்ல நேரம் இதுதான். இப்படியொரு யோக காலத்தை கை நழுவ விட்டுவிடாதீர்கள்.

கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மெத்தனப்போக்கும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், தொழில் கூட்டாளிகளும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தைவழி உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். அப்பாவழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். தர்ம காரியங்கள் செய்து அடுத்தவர்களையும் மகிழ்விப்பீர்கள். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள்.

கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள். தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் பலிக்கும். தொழிலை விரிவு செய்ய பல்வேறு வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது நிறைவுற்ற முடியும். இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்களின் கல்வி வெற்றியில் முடியும். நல்ல மதிப்பெண்கள் பெற்று அடுத்த கட்ட முயற்சியில் ஈடுபட்டு ஜொலிப்பீர்கள்.

சிலருக்கு நீண்ட நாட்களாக தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு சிறப்பாகச் செய்ய முடியும். நேர்த்திகடன்கள் செலுத்துவதற்கான நேரமும் வாய்ப்பும் தானாகவே அமையும். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த புனித யாத்திரை இப்போது செல்வதற்கான நேரம் கைகூடி வரும். ஞானிகள் அருள்புரியும் ஜீவசமாதிகளுக்கு சென்று அவர்களின் அருள் பெறலாம். மொத்தத்தில் மேஷ ராசிக்கு சிறப்புகள் மட்டுமே உள்ள புத்தாண்டு இது. அதனால் இதை வாழ்வின் தொடக்கம் போல எண்ணி, முன்னேற்றப் பாதையில் வெற்றிநடை போடத் தயார் ஆகுங்கள்.

Related Posts

About The Author

Add Comment