நுவரெலியாவில் புதிய கிராமங்கள் அமைப்பதற்கான அடிக்கல்!

நுவரெலியா மாவட்டத்தில் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம் தலைமையில் புதிய கிராமங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இன்று (30)  சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அக்கரபத்தனை சின்ன தோட்டத்தில்  நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அபிவிருத்தி நோக்கத்தின் கீழ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிநடத்தலில், “பசும்பொன்” புதிய கிராமத் திட்டமே இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் முதன் முறையாக புதிய கிராமங்களை அமைக்கும் ஆரம்ப நிகழ்வாக 300 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அவ்வகையில் புதிய கிராம அடிப்படையில் 114 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. அதேபோல், நாளை 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பொகவந்தலாவ கொட்டியாக்கொல்லை தோட்டத்தில் 186  வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் லயன் வாழ்க்கை முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் புதிதாக அமைக்கப்படவுள்ள கிராமங்களில் விளையாட்டு மைதானம், வாசிகசாலை, சனசமூக நிலையம், அஞ்சலகம், சிறுவர் காப்பகம், மின்சாரம், குடிநீர் மற்றும் மலசல கூடங்கள் உட்பட சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.

அமைச்சர் திகாம்பரம் தலைமையில் இடம்பெறும் மேற்படி அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளில் அமைச்சர் மனோ கணேசன், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன் உட்பட தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் (ட்ரஸ்ட்) தலைவர் வீ. புத்திரசிகாமணி உட்பட பலர் கலந்து கொள்வார்கள்.

Related Posts

About The Author

Add Comment