அரசியல் பழிவாங்கல் இல்லை – யோசித்த தவறிழைக்காவிடின் விடுதலை பெறலாம்

யோசித்த ராஜபக்ஷவை கைதுசெய்தது அரசியல் பழிவாங்கல்களுக்காக என தான் நம்பவில்லை என, அமைச்சர் ஹரீன் பிரணாந்து தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அமைய மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அர்ஜூன ரணதுங்கவின் சகோதரரும் இந்த விடயம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், அரசியல் பழிவாங்கல் எனில் அவரை விடுத்து ஏனையவர்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஒரு வருடமளவில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே யோசித்த கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஹரீன் பிரணாந்து குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் யோசித்த தவறிழைக்காது இருப்பின் நீதிமன்றத்தின் மூலம் விடுதலை செய்யப்படலாம் எனவும் அவ்வாறு இல்லையாயின் முதலைக் கண்ணீர் வடிக்க வேண்டியதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயத்தை கூறி ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் இலாபம் பார்க்க நினைப்பதாகவும், தவறிழைத்த பிள்ளையாயினும் கைதுசெய்யப்படுகையில் பெற்றோர் கண்களில் கண்ணீர் வருவது வழமையானது எனவும் ஹரீன் பிரணாந்து சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts

About The Author

Add Comment