மோடி நேரடியாகத் தலையிட்டு தடுக்க வேண்டும் – ஜெ. கோரிக்கை

இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் இன்னலுக்கு உள்ளாவதை இந்தியப் பிரதமர் நேரடியாக தலையிட்டு தடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்திலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் மேலும் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு கடலோர அப்பாவி மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறை பிடித்து வருவது குறித்து மீண்டும் உங்கள் கவனத்துக்கு வருத்தத்தோடு கொண்டு வருகிறேன்.

30.1.2016 அன்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 5 மீனவர்களையும் கோட்டை பட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனது அரசு அடுத்தடுத்து வற்புறுத்தியதின் பேரில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கையால் 2015-ல் இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான படகுகளையும், மீன்பிடி சாதனங்களையும் இதுவரை விடுவிக்கவில்லை.

இது மீனவர்கள் மத்தியில் மோசமான நிலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர்கள் ஏமாற்றத்துக்கும், விரக்திக்கும் ஆளாகி இருக்கிறார்கள். எனவே, உடனடியாக அவர்களுயை படகுகளையும், மீன்பிடி சாதனங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

1974 மற்றும் 1976-ல் இலங்கை – இந்தியா இடையே ஏற்பட்ட அரசியல் சட்ட விரோத ஒப்பந்தத்தை எனது அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அதை இரத்து செய்து எங்கள் மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டு வருகிறோம். இது சம்பந்தமான வழக்கு சுப்ரீம் கேர்ட்டில் உள்ளது. பாக்ஜலசந்தியில் மீன்பிடிக்கும் மீனவ சமுதாயத்தினர் ஆழ்கடலிலும் மீன் பிடிக்க தேவையான நடவடிக்கைகளை எனது அரசு எடுத்து வருகிறது. இதற்கு ரூ.1520 கோடி மத்திய அரசு தர வேண்டும் என கேட்டு வருகிறோம். மேலும் அதன் மேம்பாட்டு பணிக்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி வேண்டும் என்றும் கேட்டு இருக்கிறோம்.

இது சம்பந்தமாக எங்களது கோரிக்கையை தங்களிடம் 3.6.2014 மற்றும் 7.8.2015 ஆகிய நாட்களில் உங்களிடம் வழங்கி உள்ளேன். தமிழக அரசின் இந்த வேண்டுகோளை விரைவில் நிறைவேற்றுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

இலங்கை கடற்படையினால் எங்கள் மீனவர்கள் இன்னலுக்கு உள்ளாவதை நீங்கள் நேரடியாக தலையிட்டு தடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இப்போது பிடிபட்ட 9 பேருடன் சேர்த்து இலங்கை சிறையில் உள்ள 15 மீனவர்களையும், அவர்களுடைய 69 படகுகளையும் உடனடியாக விடுவிக்க வெளியுறவுதுறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Posts

About The Author

Add Comment