இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சாவுடன் மன்னார் இளைஞர் உட்பட ஐவர் கைது

தமிழகத்தின் – கீழக்கரை அருகே இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ஒரு கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அத்துடன் இது தொடர்பாக இலங்கை இளைஞர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதை தடுக்க பொலிசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்த இருப்பதாக மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் இராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் பொலிசார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர். இதன்படி பொலிசார் கீழக்கரை முள்ளுவாடி பஸ் நிறுத்தத்தில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதன்போது தலா 2 கிலோ கஞ்சா அடங்கிய 10 பண்டல்கள் கைப்பற்றப்பட்டன. இதன்படி மொத்தமாக 20 கிலோ கஞ்சா இவர்களிடம் இருந்து மீட்கப்பட்டது.

பின்னர் பொலிசார் காரில் இருந்த இலங்கை மன்னார் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஜாஸ்மின் என்ற கிஷான் (வயது29), அதே மாவட்டத்தை சேர்ந்த செய்யது முகமது லாமுதீன் (45), இராமநாதபுரத்தை சேர்ந்த நவாஸ்கான் என்ற நவாஸ் (46), இராமநாதபுரம் அழகன்குளத்தை சேர்ந்த கோபால் என்ற ரவீந்திரன் (32) ஆகியோரை கைதுசெய்தனர்.

அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலம் ராஜ முந்திரியிலிருந்து 20 கிலோ கஞ்சாவை கொண்டு வந்து இலங்கைக்கு கடத்த திட்டமிட்டது தெரியவந்தது. மேற்கண்ட கடத்தல் காரர்களுக்கு அடைக்கலம் கொடுத்த கீழக்கரை புது மாயாகுளத்தை சேர்ந்த முருகன் (43) என்பவரையும் பொலிசார் கைது செய்தனர். கஞ்சா கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட இராமநாதபுரத்தை சேர்ந்த இராமநாதன், ஆர்.எஸ்.மடையை சேர்ந்த கஜேந்திரன் ஆகியோரை பொலிசார் தேடி வருகின்றனர்.

Related Posts

About The Author

Add Comment