தமிழீழ மாநில அரசு வேண்டும்! கிளிநொச்சி மக்கள் கோரிக்கை

புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் வடக்கு, கிழக்கு இணைந்த பிரதேசத்தில் சமஸ்டி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும். அந்த வகையில் உருவாக்கப்படும் வடக்கு, கிழக்கு இணைந்த பிரதேசத்திற்கு தமிழீழ மாநில அரசு என பெயர் வைக்கப்படல் வேண்டும் என கிளிநொச்சியில மக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

நேற்று திங்கள்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவரும் கூட்டாக இக் கோரிக்கையினை தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஜக்கிய இலங்கைக்குள் இணைந்த வடக்கு, கிழக்கில் சமஸ்டி அடிப்படையில் தீர்வு காணப்படல் வேண்டும் என்றும். அந்த இணைந்த வடக்கு, கிழக்கிற்கு தமிழீழ மாநில அரசு என பெயர் வைக்கப்படல் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு பொது மக்கள் பின்வரும் கோரிக்கைகளையும் முன் வைத்தனர்,

மாநில அரசுக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டும், அரச நிர்வாக மொழியாக சிங்களம், தமிழ் இரண்டும் அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்படல் வேண்டும், அரசியலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வரையறுக்கப்படல் வேண்டும், பன்மைத்துவ சமூங்கங்கள் வாழ்கின்ற இலங்கையில் அனைத்து சமூங்களுக்கும் உரிமைகள் நலன்கள் மதங்கள் பாதுகாக்கின்ற விடயங்கள் உள்ளடக்கப்படல் வேண்டும், மலையக மக்கள், முஸ்லிம் மக்களும் சம அந்தஸ்துடன் வாழ கூடிய வகையில் ஏற்பாடுகள் கொண்டுவரப்படல் வேண்டும்.

மேலும், சமஸ்டி என்பது பிரிவினை வாதம் அல்ல எனவும், இந்தியாவில் உள்ளது போன்று மாநில அரசு போன்ற முறைமைக்கு அமைவாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுமக்கள் வாய்மொழி மூலமும், எழுத்து மூலமும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் இதில் கருத்து தெரிவித்த புதிய அரசியலமைப்பு சீர்திருத்த குழுவின் உறுப்பினர் சி. தவராஜா, மக்கள் தயக்கமின்றி தங்களுடைய கருத்துககைள முன் வைக்க வேண்டும் எனவும் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டிய விடயங்கள் குறித்து கருத்துக்களை முன்வைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்படும் கருத்துக்கள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு அரசியலமைப்புச் சீர்திருத்தம் மேற்கொள்ளகின்ற குழுவிடம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Related Posts

About The Author

Add Comment