170 ஓட்டங்களில் சுருண்டது இலங்கை: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

ஜூனியர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 97 ஓட்டங்களால் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடந்த அரையிறுதியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே மோசமாக இருந்தது. அணித்தலைவர் இஷான் கிஷான் 7 ஓட்டங்களிலும், ரிஷப்பன்ட் 14 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் 3வது விக்கெட்டுக்கு அமோல் பிரித்சிங்- சர்பிராஸ்கான் ஜோடி நிதானமாக விளையாடியது.

இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தனர். சர்பிராஸ்கான் 59 ஓட்டங்களும், அமோல் பிரித்சிங் 72 ஓட்டங்களும் எடுத்தனர்.

அதன் பின்னர் வந்த சுந்தர் 43 ஓட்டங்களும், ஜாபர் 29 ஓட்டங்களும் எடுத்து அணியின் ஓட்டங்களை சற்று உயர்த்தினர்.

அடுத்து வந்த மகிபால் (11), மயாங்க் டாகர் (17), ராகுல் பாதம் (1) வரிசையாக ஆட்டமிழந்தனர்.

இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 267 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை அணி சார்பில், அசிதா பெர்னாண்டோ சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லஹிரு குமார, நிமேஷ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

170 ஓட்டங்களில் சுருண்ட இலங்கை:-

268 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இலங்கை அணிக்கு கவின் பண்டாரா (2), அவிஸ்கா (4) மோசமான தொடக்கம் கொடுத்தனர்.

இதன் பின்னர் வந்த அணித்தலைவர் அசாலங்காவும் (6) நிலைக்கவில்லை. கமிந்து மெண்டிஸ் (39), சாமு (38), ரந்திகா (28), டமிந்த சில்வா (24) ஓரளவு ஓட்டங்கள் எடுத்தனர்.

இருப்பினும் அடுத்து வந்தவர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி 42.4 ஓவர்கள் முடிவில் 170 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதனால் இந்திய அணி 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்திய அணி சார்பில், மயாங்க் டாகர் 3 விக்கெட்டுகளையும், அவெஸ் கான் 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது, ராகுல் பாதம், சுந்தர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

சிறப்பாக ஆடிய அமோல் பிரித்சிங் ஆட்டநாயகன் விருது வென்றார்.

நாளை மறுநாள் நடக்கும் மற்றொரு அரையிறுதி போட்டியில் வங்கதேசம்- மேற்கிந்திய அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணியுடன் இந்தியா இறுதிப்போட்டியில் எதிர்வரும் 14ம் திகதி மோதுகிறது.

Related Posts

About The Author

Add Comment