குடும்ப தகராறில் விபரீத முடிவு, மகளை கொன்று விட்டு விவசாயி தற்கொலை

குடும்ப தகராறில் விவசாயி ஒருவர் தனது மகளையும், மகனையும் கொலை செய்யும் நோக்கத்துடன் ஏரியில் தூக்கி வீசிவிட்டு தானும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் சிறுமியான அவரது மகள் உயிரிழந்தாள். மகன் நீச்சல் அடித்து உயிர் தப்பினான்.

இந்த விபரீத சம்பவம் குறித்து விவரம் வருமாறு:-

விவசாயி
மைசூரு தாலுகா உத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு(வயது 35). விவசாயி. இவரது மனைவி ஷில்பா. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களது மகள் ஸ்பூர்தி(9), மகன் சுஜன்(6). இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ராஜு மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று காலையிலும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்வில் வெறுப்படைந்த ராஜு தற்கொலை செய்து கொள்ள நினைத்தார். மேலும் தான் இறந்துவிட்டால் தனது பிள்ளைகளின் கதி என்ன ஆகும் என்று நினைத்த அவர் அவர்களை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

உயிர் தப்பினான்
அதன்பேரில் நேற்று காலையில் தனது மகள் மற்றும் மகனை அப்பகுதியில் உள்ள ஏரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு முதலில் மகளையும், 2-வதாக மகனையும் ஏரியில் தூக்கி வீசிவிட்டு, தானும் ஏரிக்குள் குதித்தார். இதில் அதிர்ச்சி அடைந்த அவரது மகன் சுஜன் நீச்சல் அடித்து கரைக்கு வந்து உயிர் தப்பினான். பின்னர் அவன் நடந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் தெரிவித்தான்.

அவர்கள் ஏரியில் குதித்து ராஜுவையும், அவரது மகளையும் தேடினர். அதற்குள் ராஜுவும், அவரது மகளும் நீரில் மூழ்கி இறந்துவிட்டனர். இதனால் அவர்களை அப்பகுதியினர் பிணமாக மீட்டனர்.

சோகம்
பின்னர் இதுகுறித்து மைசூரு புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ராஜு மற்றும் அவரது மகள் ஸ்பூர்தி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உருக்கமான கடிதம்
ராஜு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தில் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணமில்லை என்றும், தனது இந்த முடிவுக்கு தான் மட்டுமே காரணம் என்றும் எழுதியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.]

Related Posts

About The Author

Add Comment