காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் காலஎல்லை நீடிக்கப்படுமா?

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லையை நீடிக்கும் நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என, தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆணைக்குழுவின் காலஎல்லை எதிர்வரும் 15ம் திகதியுடன் (15.02.2016) நிறைவடையவுள்ளது. இதன்படி அந்த ஆணைக்குழு தொடர்ந்து செயற்பட வேண்டுமாயின் ஜனாதிபதியால் அதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.

இந்தநிலையில், காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில், அரசாங்கம் இதுவரை தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என, அந்த ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம குறிப்பிட்டுள்ளார்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னரே இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ள போதும், இதுவரை எந்த பதிலும் கிடைக்கப் பெறவில்லை என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் இந்த வாரத்துக்குள் ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்படாவிடில், அது கலைக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோர் தொடர்பில் ஆராய, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய, காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.

கடந்த வருடம் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இடைக்கால அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளதோடு, அது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் சமர்ப்பிக்கப்பட்டது.

Related Posts

About The Author

Add Comment