மனித உரிமைகள் ஆணையாளருக்கு கொடுத்த வாக்குறுதி பிரதிகூலமானது!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரிடம் பிரதமர் மற்றும் ஜனாதிபதி அளித்துள்ள வாக்குறுதி, 1815ம் ஆண்டின் மேல் நாட்டு ஒப்பந்தத்துடன் ஒப்பிடக் கூடிய, நாட்டுக்கு பிரதிகூலத்தை ஏற்படுத்தும் இணக்கப்பாடு என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட யோசனையை செயற்படுத்துவதாக, இலங்கைக்கு விஜயம் செய்த மனித உரிமைகள் ஆணையாளரிடம், பிரதமர் மற்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளனர்.

இந்த யோசனையின் விசேசம் என்னவெனில், அது இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் வாக்களிப்பின்றி நிறைவேற்றப்பட்டமையே என, மஹிந்த ராஜபக்ஷவின் கையெழுத்துடன் இது தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ஜெனிவாவிலுள்ள இலங்கைக்கான தூதுவர் அந்த யோசனையில் மாற்றம் செய்ய முற்பட்ட வேளை, இலங்கை அரசாங்கம் அதற்கு இடமளிக்காது, அமெரிக்காவினால் வௌியிடப்பட்ட முறையிலேயே ஏற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்தது.

அமெரிக்காவின் யோசனையை எந்தவொரு மாற்றமும் இன்றி ஏற்றுக் கொண்டு அது இலங்கைக்கு கிடைத்த பாரிய இராஜதந்திர வெற்றியாக மக்கள் மத்தியில் சித்தரிக்க முற்படுகின்றனர் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் அது 1815ம் ஆண்டின் மேல் நாட்டு ஒப்பந்தத்துடன் ஒப்பிடக் கூடிய நாட்டுக்கு பிரதிகூலத்தை ஏற்படுத்தும் இணக்கப்பாடு எனவும், மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

About The Author

Add Comment