ஊழல் மோசடிகளையே தற்போதய அரசாங்கம் விசாரணைக்குட்படுத்துகின்றது!

நல்லாட்சி அரசாங்கம் தமது கடமைகளை பொறுப்பேற்றவுடன் ஊழல் மோசடிக்காரர்களை கண்டறிந்து அதற்கமைய சுயாதீனத்தினை நிலைநாட்டும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது. இதனை சிலர் அரசியல் பழிவாங்கல்கள் என தெரிவிக்கின்றனர். இது அரசியல் பழிவாங்கல் இல்லை என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

நேற்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் ​போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், குறிப்பாக இந்த நல்லாட்சி அரசாங்கம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவை ஆரம்பித்து அதனூடாக குற்றவாளிகளை கண்டறியும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கையில் எவ்வித பேதமும் இல்லாமல் பல தரப்பினர்களை அழைத்து வாக்குமுலங்களும் பெறப்பட்டது. மேலும் விசாரணைகள் மூலம் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்கள் கைது செய்து விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

இந்த நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவின் செயற்பாடானது எந்த அரசியல் விளையாட்டும் இல்லை. எவரையும் பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை. இப்பிரிவுக்கு வரும் முறைப்பாடுகள் அனைத்துமே பொதுமக்கள் மூலமாகவும் சிவில் அமைப்புக்கள் மூலமாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களேயாகும். எனவே இதில் முழுமையாக பொதுமக்களின் தலையீடுகளே உள்ளன.

தற்போது அண்மையில் நடைபெற்று வரும் சிஎஸ்என் தொலைக்காட்சி நிறுவன நிதிமோசடி தொடர்பில் நடைபெற்று வருவது அரசியல் பழிவாங்கல் எனப் பலரும் இனவாத கருத்தை பரப்பி வருகின்றனர். இது முற்றுமுழுதாக மறுக்கப்பட வேண்டிய விடயம். இதில் எவ்வித அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையும் இல்லை. இதனை அரசியல் பழிவாங்கல் என்று கூறுவோருக்கு நாம் கூற விரும்புவது யாதெனில், இந்நடவடிக்கை அரசியல் பழிவாங்கலாயின் இத் ​தொலைக்காட்சி சேவைக்கு கிடைத்த முழுப்பணமும் எவ்வாறு கிடைத்தது? இங்கு எவ்வித ஊழலும் இடம்பெறவில்லையா? அவ்வாறு இருப்பின் அவ்வளவு தொகைக்குமான பற்றுச்சீட்டு பணம் கிடைத்த விதத்தினை காட்டுமாறு கேட்கிறோம் எனவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

அத்துடன் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதனையும் சிலர் இனவாத கருத்தாக பரப்பி வருகின்றனர். தேசிய கீதத்தினை தமிழில் இசைப்பது ஒன்றும் இனவாத செயற்பாடல்ல. சிங்கள மொழியிலுள்ள அதே தேசிய கீதத்தின் மொழிபெயர்ப்பு வடிவமே தமிழில் இசைக்கப்படுகின்றது. அதைவிடுத்து தமிழ் மொழியில் புதிதாக தேசிய கீதம் இயற்றப்படவில்லை. எவருக்கும் தமக்கு தெரிந்த மொழிகளில் தேசிய கீதம் பாடப்படும் போதே தேசத்தின் மீதான பற்று அதிகமாகும். தேசத்தினை நேசிப்பர். அந்த வகையில் சிங்களம் தெரியாத தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இது நன்மையே, இதில் எவ்வித குற்றமும் இல்லை எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரட்ண பரணவிதான, கலாநிதி ஆசு மாரசிங்க ஆகியோரும் உடனிருந்தனர்.

[b]BPK[/b]

Related Posts

About The Author

Add Comment